விஷ ஊசி விவகாரம்: யாழ்ப்பாண வைத்தியர்கள் மூலம் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கக் கூறியுள்ளேன் – ராஜித

விஷ ஊசி விவகாரம்: யாழ்ப்பாண வைத்தியர்கள் மூலம் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கக் கூறியுள்ளேன் – ராஜித

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 7:26 pm

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய, பாதிக்கப்பட்டவர்களில் சிலரைத் தம்மிடம் அனுப்புமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று (16) தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு இணை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.
ராஜித சேனாரத்ன: யாழ்ப்பாணத்திலேயே அவர்களின் வைத்தியர்கள் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து அழைத்து வர வேண்டுமா? யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியர்களில் 80 வீதமானவர்கள் தமிழர்களே. இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையுடன் எனக்கு அறிவிக்குமாறு நான் அமைச்சருக்குக் கூறியுள்ளேன். அமைச்சர் சத்தியலிங்கம் ஒரு வைத்தியர். மருத்துவம் தொடர்பில் விக்னேஸ்வரனை விட அவர் நன்கு அறிவார்.

கேள்வி: அமெரிக்காவில் இருந்து வைத்தியர்கள் சிலர் வந்துள்ளனரா?

ராஜித சேனாரத்ன: அமெரிக்காவில் இருந்து அழைப்பதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் அல்லவா. இது தொடர்பில் ஆராய முடியுமா என்று பார்க்க வேண்டும். இதனை அவர்களால் கண்டறிய முடியாது போகும் பட்சத்திலேயே அமெரிக்காவில் இருந்து அழைத்து வர வேண்டும்.

கேள்வி: அமெரிக்காவில் இருந்து வருகை தந்து சில வைத்தியர்கள் மருத்துவ முகாமொன்றை நடத்துகின்றனர். அங்கு பரிசோதிப்பது தொடர்பிலேயே கூறப்பட்டது.

ராஜித சேனாரத்ன: வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இருக்கும் பட்சத்தில், மருத்துவ முகாம்களில் இருப்பவர்களை ஏன் நாங்கள் அழைக்க வேண்டும்? அவ்வாறான நடைமுறையொன்று இல்லை அல்லவா? எம்மால் முடியாத விடயங்களுக்கே நாம் அவர்களின் ஒத்துழைப்பை நாடுவோம்.

கேள்வி: சட்டரீதியாக அவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுக்க முடியுமா?

ராஜித சேனாரத்ன: நோயைக் கண்டுபிடிக்க முடியாவிடின் வெளிநாடுகளில் இருந்து நிபுணர்களை அழைப்பதற்கு அரசாங்கத்தால் முடியும். எனினும், தற்போது அந்தத் தேவை இல்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்