வைட்வோஷ் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை முதற்தடவையாக வென்றது இலங்கை

வைட்வோஷ் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை முதற்தடவையாக வென்றது இலங்கை

வைட்வோஷ் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை முதற்தடவையாக வென்றது இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 2:59 pm

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை முதற்தடவையாக வைட்வோஷ் அடிப்படையில் இலங்கை வெற்றிகொண்டுள்ளது.

இது அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 17 வருடங்களின் பின்னர் இலங்கை பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 355 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியா 379 ஓட்டங்களையும் பெற்றன.

8 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களுடன் ஐந்தாம் நாளான இன்று இலங்கை தனது இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

44 ஓட்டங்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்த தனஞ்சய டி சில்வா 65 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 347 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதன்படி வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 324 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக முதல் விக்கெட்டுக்காக 77 ஓட்டங்கள் பகிரப்பட்டன.

முதல் விக்கெட்டாக ஷோன் மார்ஷ் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி தோல்விப் பாதைக்கு தள்ளப்பட்டது.

ஆறுதல் அளிக்கும் வண்ணம் துடுப்பெடுத்தாடிய டேவிட் வோனர் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் 160 ஓட்டங்களுடன் முடிவுக்குவர இலங்கை அணி 163 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 64 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.

1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிக்கு அமைவாக, டெஸ்ட் தரவரிசையில் ஓர் இடம் முன்னேறிய இலங்கை ஆறாமிடத்தைப் பெற்றுக்கொள்ள
முதலிடம் வகித்த அவுஸ்திரேலியா மூன்றாமிடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

மொத்தமாக 28 விக்கெட்டுகளை வீழ்த்திய ரங்கன ஹேரத் கடைசிப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் விருதுகளைத் தட்டிக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்