சி.வி.விக்னேஸ்வரன் வாக்குறுதியளித்ததால் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விவசாயி

சி.வி.விக்னேஸ்வரன் வாக்குறுதியளித்ததால் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விவசாயி

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 7:10 pm

வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயி ஒருவர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்றிரவு கைவிடப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொலைபேசியூடாக வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, போராட்டத்தை கைவிடுவதற்கு விவசாயி இணங்கியுள்ளார்.

2010 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் எனக்கோரி, 73 வயதான விவசாயி ஒருவர் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சரின் செயலாளர் உள்ளிட்ட பலர் விவசாயியை நேற்றிரவு சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியபோதிலும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

இதனையடுத்து, வடமாகாண முதலமைச்சர் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு விவசாயியுடன் உரையாடியதுடன், அவரது கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் வாக்குறுதியளித்த பின்னர் நீராகாரத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயி கைவிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்