சட்டம் யாவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

சட்டம் யாவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

சட்டம் யாவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 9:48 am

சட்டம் யாவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற 2016 இற்கான ஆசிய சட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சிறந்த சமூகமொன்றிற்காக சட்டத்தின் ஆட்சியை வலுவூட்டும் செயற்பாடுகளின்போது அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியன தத்தமது பொறுப்பையும், கடமையையும் சரிவர நிறைவேற்றுவது அத்தியாவசியமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆயினும், நாட்டிலுள்ள நீதிமன்றங்களினால் எத்தகைய கொள்கையின் அடிப்படையில் வழக்குகள் ஒத்திவைக்கப்படுகின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனம் செலுத்தக்கூடிய சில முக்கிய வழக்கு விசாரணைகள் அண்மைக்காலமாக காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்தகைய வழக்குகளின் முடிவுகள் என்னவென்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறினார்.

பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களில் முக்கியமானவர்கள் என்ற தரத்திலுள்ளவர்கள் மாத்திரம் விளக்கமறியலில் இருந்து அரசாங்க வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றமை எந்தளவிற்கு நியாயமானது என மக்கள் தம்மிடம் வினவுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அப்பாவி ஒருவர் சந்தேகநபராக கருதப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படுமா எனவும் மக்கள் கேள்வியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆகவே இத்தகைய நிலைமைக்கான பொறுப்பை நீதித்துறையினது அல்லது சிறைச்சாலையினது அல்லது சுகாதார அமைச்சினது அல்லது வேறு தரப்பினரது தலையில் சுமத்துவதற்கு தாம் அவசரத் தீர்மானத்திற்கு வரப் போவதில்லை என்று ஜனாதிபதி இந்த மாநாட்டில் மேலும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்