சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Aug, 2016 | 6:11 pm

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச வைத்திய அதிகாரிகளால் தொடரப்பட்ட வழக்கு, மல்லாகம் நீதவான் ஏ. ஜூட்சன் முன்னிலையில் இன்று கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடரப்பட்டிருந்தது.

நீர் மாசடைந்தமை தொடர்பில் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தரப்புகளால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நீதிமன்றத்தின் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவிருந்தது.

ஆயினும், கட்டளைகளின் பிரதிகள் இன்றைய தினம் கிடைக்கப்பெறவில்லை என்றும், அவை எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் கிடைத்ததும் அடுத்த கட்ட சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சோ.தேவராஜா குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் சுமார் 450 கிணறுகளிலுள்ள நீரில் ஒருவகை ஈயம் கலந்துள்ளமை இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருந்தது.

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலந்துள்ளமையை உறுதிப்படுத்தும் வகையில் 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.

யாழ். நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை பல்வேறு வகைகளில் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்