கங்காதரன் ஹரிஷ்ணவி கொலை வழக்கின் சந்தேகநபருக்கு பிணை

கங்காதரன் ஹரிஷ்ணவி கொலை வழக்கின் சந்தேகநபருக்கு பிணை

கங்காதரன் ஹரிஷ்ணவி கொலை வழக்கின் சந்தேகநபருக்கு பிணை

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 7:35 pm

வவுனியா, உக்குளாங்குளத்தில் கங்காதரன் ஹரிஷ்ணவி என்ற 14 வயதான பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஹரிஷ்ணவியின் சடலம் மீட்கப்பட்டதுடன், பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, பெப்ரவரி 25 ஆம் திகதி மாணவியின் வீட்டிற்கு அருகில் வசித்துவந்த 35 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக தனது கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி,
அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்று சந்தேகநபரின் மனைவி வவுனியா மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் முன்னிலையில் இந்த பிணை மனு இன்று ஆராயப்பட்டது.

பிணை மனுவில் சட்ட மா அதிபர் மற்றும் வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதன்போது மாணவி ஹரிஸ்ணவியின் கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதாகவும், 14 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியின் வன்புணர்வு கொலை என்பதாலும், இந்தக் கொலை தொடர்பில் நாடு முழுவதும் பாடசாலை மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாலும் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி நிஷான் நாகரட்ணம் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

ஆயினும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாகக் காணப்படும் வரை ஒருவரைக் குற்றவாளியாகக் கருத முடியாதென விளக்கமளித்த நீதிபதி, சந்தேகநபரை இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான
இரண்டு அரச உத்தியோகத்தர்களின் சரீரப் பிணையிலும் விடுவிப்பதற்கு அனுமதி வழங்கினார்.

மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்