போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க சார்க் மாநாட்டில் அழைப்பு விடுக்க எண்ணியுள்ளார் ஜனாதிபதி

போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க சார்க் மாநாட்டில் அழைப்பு விடுக்க எண்ணியுள்ளார் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 5:06 pm

ஆசிய வலயத்தில் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கான பிராந்திய ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, சார்க் மாநாட்டின்போது உத்தியோகபூர்வ அழைப்பு விடுப்பதற்கு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் சொஹெய்ல் அமான் (Air Chief Marshal Sohail Aman) ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்க பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் சர்வதேச ரீதியிலான மாநாடுகளின்போது பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஜனாதிபதி இதன்போது தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் பலர் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கும் இலங்கை அரசாங்கம் சார்பாக ஜனாதிபதி இதன்போது கவலையைத் தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த அந்த நாட்டின் விமானப்படைத் தளபதி, பாதுகாப்புத்துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தெளிவான புரிந்துணர்வு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பாகவும் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி ஜனாதிபதியை இந்த சந்திப்பின்போது தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்