திருக்கேதீஸ்வரத்திலுள்ள கிணற்றில் இரண்டாவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

திருக்கேதீஸ்வரத்திலுள்ள கிணற்றில் இரண்டாவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

திருக்கேதீஸ்வரத்திலுள்ள கிணற்றில் இரண்டாவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2016 | 9:49 pm

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கிணற்றில் இரண்டாவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதுவரையில் 12.8 அடி ஆழத்திற்குக் கிணறு தோண்டப்பட்டுள்ளதுடன் இன்றைய அகழ்வின் போது சிறிய எலும்புத் துண்டுகளின் பகுதிகளும் பல்லொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வெடிக்காத ரி 56 ரக துப்பாக்கி ரவையொன்றும் வீதி அதிகார சபை, வீதி அளவீட்டுப் பணிகளின் போது உபயோகிக்கும் பட்டியொன்றும், அனுராதபுரம் த்ரீ ஸ்டார் என்று பெயர் பொறிக்கப்பட்ட உரப்பையொன்றும் மரக்கட்டையொன்றும் கம்பித்துண்டொன்றும் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கிணற்றில், மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜாவின் உத்தரவிற்கு அமைய, நேற்று (01) காலை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அகழ்வுப் பணிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, நேற்று ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 52 சென்றி மீற்றர் ஆழத்திற்குப் புதைகுழி கிணறு தோண்டப்பட்டதுடன், அதிலிருந்து ஐந்து மற்றும் மூன்று சென்றிமீற்றர் அளவான இரண்டு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டன.

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை அடுத்து அதனை அண்மித்த பகுதியிலுள்ள கிணறு ஒன்றும் காணாமற்போனோரின் உறவினர்களால் அடையாளங்காட்டப்பட்டது.

அதனை அகழ்வதற்கான உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், சட்ட வைத்திய அதிகாரிகள் சமூகமளிக்காமை, சீரற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களால் அகழ்வுப் பணிகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்