மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தால் பயனடைந்த பத்தலயாகம, அலகொலவெவ, பொலாலகம கிராமத்தினர்

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தால் பயனடைந்த பத்தலயாகம, அலகொலவெவ, பொலாலகம கிராமத்தினர்

எழுத்தாளர் Bella Dalima

30 Jul, 2016 | 8:12 pm

நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டை – கெலியபுர – பத்தலயாகம கிராம மக்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பத்தலயாகம பகுதியில் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட வேலிகள், எல்லைகளை நிர்ணயிக்கும் வேலிகளாக மட்டுமே காணப்பட்டமையினால், சொத்துக்களை மாத்திரமின்றி உயிர்களையும் இழக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

விவசாயத்தை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு சுமார் 800 குடும்பங்கள் இக்கிராமத்தில் வசிக்கின்றன.

இங்குள்ள சுமார் 4 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறுவதற்கு காட்டு யானைகள் காரணமாக அமைந்துள்ளன.

காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதமையினால், சில விவசாயக் குடும்பங்கள் இந்த கிராமத்தை விட்டுச் சென்றுள்ளன.

இந்நிலையில், தற்போது பத்தலயாய மக்களைப் பாதுகாப்பதற்கான வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தம்புள்ளை – வெவல மார்க்கத்தின் தனயாய சந்தியில் இருந்து சீகிரிமுல்ல – அலகொலவெவ வீதி, மக்கள் சக்தி திட்டத்திள் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமான புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

சுமார் 25 வருடங்களின் பின்னர் இந்த வீதி புனரமைக்கப்பட்டமையினால், 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3000 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

இதேவேளை, மாத்தறை – வெலிகம – பொலாலகம நீர்த் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

200 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு நீரினை வழங்கும் இந்த நடவடிக்கையும் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்