இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கும் தீர்மானத்திற்கு வட மாகாண முதல்வர் இணக்கம்

இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கும் தீர்மானத்திற்கு வட மாகாண முதல்வர் இணக்கம்

இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கும் தீர்மானத்திற்கு வட மாகாண முதல்வர் இணக்கம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 9:37 pm

வடக்கில் இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கும் தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலும் ஓமந்தையிலும் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், வடக்கின் மாங்குளத்திலும், மதகு வைத்தகுளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான கடிதமொன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட 8 பேருக்கு பிரதியிட்டு, கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசனுக்கு முதலமைச்சர் அனுப்பிவைத்துள்ளார்.

வடக்கிற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவில் இரு பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தலா 100 மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் மற்றும் மதகுவைத்தகுளம் ஆகிய இடங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இரு பொருளாதார மத்திய நிலையங்களின், எஞ்சியுள்ள கட்டட நிர்மாணப் பணிகளுக்கான ஒதுக்கீடுகள் 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாங்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமையவுள்ள இடம் எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படுமென முதலமைச்சரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாங்குளத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் கடலுணவு வகைகளையும், மதகுவைத்தகுளத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகளையும் சந்தைப்படுத்துவதென்பது தமது நிலைப்பாடு எனவும் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மதகுவைத்தகுளத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள காணி வட மாகாண சபையின் காணி எனவும் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக அதனை குத்தகைக்கு வழங்க முடியுமெனவும் முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்