பெசில் ராஜபக்ஸ, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில்

பெசில் ராஜபக்ஸ, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில்

பெசில் ராஜபக்ஸ, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 8:24 pm

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க ஆகியோர், வாக்குமூலமளிப்பதற்காக இன்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் ஆஜராகினர். இதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திவிநெகும திணைக்களத்தின் நிதியத்தை பயன்படுத்தி, ப்ளாஸ்டிக் நீர்க்குழாய்களை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், அவர்கள் கடுவலை நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள்மீது, பொது உடைமை சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் ஆஜர்படுத்தப்பட்டமையால் அவர்களுக்கான பிணை நிராகரிக்கப்பட்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான 2 கோடி ரூபாவை பயன்படுத்தி 50 இலட்சம் நாற்காட்டிகளை அச்சிட்ட குற்றச்சாட்டில் பெசில் ராஜபக்ஸ 2015ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில், கடந்த மே மாதம் 12ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்ட பெசில் ராஜபக்ஸ பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கம்பஹா மல்வானை பிரதேசத்தில் இடமொன்றை கொள்வனவு செய்த சம்பவமொன்று தொடர்பில், ஜூன் ஆறாம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ அன்றைய தினமே விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின்படி, பசில் ராஜபக்ஸவை விளக்கமறியலில் வைப்பதற்றாக ஏற்றிச் சென்ற பஸ், நீதிமன்ற வளாகத்தில் காருடன் மோதியமையால் அவரை அழைத்துச் செல்வது ஒருசில நிமிடங்கள் தாமதமானது.

இதேவேளை, நிதி தூய்தாக்கல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

70 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்போது, 50,000 ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 5 இலட்சம் ரூபா வீதமான மூன்று சரீரப்பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

அவரது கடவுச்சீட்டை தடை செய்த நீதிமன்றம் அதனை நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், நாமல் ராஜபக்ஸ 2012 மற்றும் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் வங்கிகளில் நடத்திச் சென்ற கணக்குகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறும் நீதவான் நான்கு வணிக வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு, பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்க உதயங்க வீரதுங்க வருகை தராமமையால் அவரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு, பொலிஸ் நிதிக்குற்ற விசாணைப்பிரிவு கோரிக்கை விடுத்திருந்தது.

கோட்டை நீதவான், லங்கா ஜயரத்ன இந்த வேண்டுகோளை நிராகரித்ததுடன் உதயங்க வீரதுங்கவின் வௌிநாட்டு முகவரிக்கு வௌிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி அறிவித்தல் பிறப்பிக்குமாறு குறிப்பிட்டார்.

மனு மீதான விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்