முறிகள் விநியோகத்தைப் போன்று நிலக்கரி விநியோகம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள முயற்சி?

முறிகள் விநியோகத்தைப் போன்று நிலக்கரி விநியோகம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள முயற்சி?

எழுத்தாளர் Bella Dalima

14 Jul, 2016 | 9:00 pm

செயற்திறனற்ற மூவரடங்கிய குழுவொன்றை நியமித்து முறிகள் விநியோகத்தைப் போன்று நிலக்கரி கொடுக் கல் வாங்கல் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

6 மாதங்கள் சென்றும் கணக்காய்வுப் பிரச்சினைக்கு பதில் வழங்காத நிலையில், மீண்டும் மின்சார சபையிடம் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வினவுமாறு ஊழலுக்கு எதிரான முன்னணி, கணக்காய்வாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நிலக்கரி கொள்வனவின் போது இடம்பெற்றுள்ள குளறுபடிகள் காரணமாக 1.8 பில்லியன் ரூபாவை நாடு இழந்துள்ளதாகத் தெரிவித்து கணக்காய்வாளர் நாயகம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிடம் தகவல்களைக் கோரியிருந்தது.

இந்த கொடுக்கல் வாங்கல் நீதிமன்றத்தின் மனசாட்சிக்குக் குந்தகம் விளைவித்துள்ளதாக, தனியார் நிறுவனமொன்று தாக்கல் செய்த மனுவினைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் பேராசிரியர் கே.கே.வை.டபிள்யூ.பெரேரா, போராசிரியர் லக்ஷ்மன் ஆர். வட்டவல மற்றும் போராசிரியர் ஜானக்க பி. ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழுவினை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நேற்று நியமித்தார்.

குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதத்தினை வழங்கியதன் பின்னர் அமைச்சரும் அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொடவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அமைச்சரவை நியமித்த நிலையியல் கொள்முதல் சபையின் உறுப்பினராக சுரேன் பட்டகொட செயற்பட்டார்.

உயர் நீதிமன்றம் மற்றும் கணக்காய்வாளர் திணைக்களம் ஆகியன இரண்டு சந்தர்ப்பங்களில் நிலக்கரி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய போதிலும், குழுவொன்றை நியமித்து அதுகுறித்து ஆராய்வது தவறுகளை மறைப்பதற்கான ஒரு முயற்சி என ஊழலுக்கு எதிரான முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்