இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2016 | 1:23 pm

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் இராணுவ கட்டளை தளபதி ஒருவர் மன்றில் ஆஜராகிய சரணடைந்தோர் தொடர்பான முழுமையான விடங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.எம் சம்சுதீன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட 11 பேர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

பிரதிவாதிகள் சார்பில், 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் சானக்கிய குணவர்தன மன்றில் ஆஜராகி இன்று சாட்சியம் வழங்கியிருந்தார்.

இறுதி யுத்ததின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றும் பிரதிவாதி சார்பில் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாக அறிவித்துள்ள நீதிபதி, அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் கடந்த இரண்டு தவணைகளின் முன்னர், இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தோர் தொடர்பான தகவல்கள் தம்மிடம் காணப்படுவதாக பிரதிவாதிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய இன்றைய தினம் குறித்த அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் இந்த அறிக்கையில் முன்னாள் போராளிகள் தொடர்பான தகவல்களும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தரவுகள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக முழுமையாக அறிக்கையை அடுத்த தவணை விசாரணையின் போது நீதிமன்றத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்