முறிகள் விநியோக மோசடியைத் தொடர்ந்து நிலக்கரி கொள்வனவிலும் மோசடி

முறிகள் விநியோக மோசடியைத் தொடர்ந்து நிலக்கரி கொள்வனவிலும் மோசடி

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 9:24 pm

இலங்கை மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் குறித்து மக்கள் மத்தியில் இன்னமும் சர்ச்சை தணியாத நிலையில் மேலும் பல பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்ற கொடுக்கல் வாங்கலொன்று தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலக்கரி கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கலின் போது 1.2 பில்லியன் ரூபா நட்டம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இந்த கொடுக்கல் வாங்கல் நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அறிவித்துள்ளது.

இந்த நிலக்கரி கொடுக்கல் வாங்கல் தொடர்பான மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொடவின் செயற்பாடுகள் நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக, மனுவை தள்ளுபடி செய்த பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் கூறினார்.

பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் மனுவைத் தள்ளுபடி செய்த போதிலும், பொதுமக்களின் நிதி தொடர்பான விடயம் என்பதால், நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் பொருட்டு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்தது.

தகுதியற்ற நிறுவனமொன்றுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்பது முதலாவது பரிந்துரையாகும்.

போட்டித்தன்மையான முறையொன்றின் கீழ் மீண்டும் விலை மனு கோரப்பட்டு இந்த கொடுக்கல் வாங்கல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

தகைமைகள் காணப்பட்ட போதிலும், நிலக்கரி விநியோக விலைமனுவை வேறொரு நிறுவனத்திற்கு வழங்கியமையினால், Noble Resources International என்ற சிங்கப்பூர் நிறுவனமொன்றே இவ்வாறு நீதிமன்ற உதவியை நாடியிருந்தது.

தமக்கான வாய்ப்பை Swiss Singapore Overseas என்ற நிறுவனத்திற்கு வழங்கியமையினால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் சபையின் நிபந்தனைகளுக்கு அமைய 1.064 மில்லியன் மெட்ரிக் தொன்  நிலக்கரியை விநியோகிப்பதற்காக Noble Resources International நிறுவனம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தமது விலைமனுவை முன்வைத்திருந்தது.

உரிய தரத்திற்கு அமைய ஒரு மெட்ரிக் தொன்  நிலக்கரியை 46.62 டொலர்களுக்கு வழங்க முடியும் என அவர்கள் விலை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

எனினும், ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம் ஒரு மெட்ரிக் தொன்  நிலக்கரியை 54.41 அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதாக அதன் விலைமனுவில் குறிப்பிட்டிருந்தது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் சபை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு ஆகியனவே விலைமனு தொடர்பில் ஆராய்கின்றன.

நிலையியல் கொள்முதல் குழுவின் தலைவராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் பீ.எஸ்.விதானகே செயற்படுவதுடன், மின்சக்தி மற்றும் மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.சி.விக்ரமசேகர, மேலதிக செயலாளர் எஸ்.எ.என்.சரணதிஸ்ஸ உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

விலை மனுவை முன்வைத்து தகைமைகளைப் பெற்றிருந்த போதிலும், நிலையியல் கொள்முதல் சபை, நிலக்கரி கொள்வனவு ஒப்பந்த நிபந்தனைகளை மீண்டும் மாற்றியதாக Noble Resources International நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தது.

இது தொடர்பில் Swiss Singapore Overseas நிறுவனம் நிலையியல் கொள்முதல் சபைக்கு எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்திருந்ததாக Noble Resources International நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டு 1.064 மில்லியன் மெட்ரிக் தொன்  நிலக்கரி Swiss Singapore Overseas நிறுவனத்திடமிருந்து 58 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது

Noble Resources International நிறுவனம் முன்வைத்த விலைமனுவுக்கு அமைய கொள்வனவு செய்யப்பட்டிருந்தால் அதற்காக 49.6 மில்லியன் டொலர்களே செலவாகியிருக்கும்.

இந்த கொடுக்கல் வாங்கலுக்கு அமைய 8.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 1.2 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது.

இந்த நட்டம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் Lanka Coal Company நிறுவனத்திடம் விடயங்களைக் கேட்டறிந்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி மைத்ரி குணரத்ன கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் தொடர்பில் மீண்டுமொரு தெளிவூட்டலைக் கோருவதற்கு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இது தொடர்பில் நிலையியல் கொள்முதல் சபையின் தலைவர் ஜீ.எஸ்.விதானகேவிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய சந்தர்ப்பத்தில், அவர் கருத்து வெளியிட மறுத்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்