தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்தியப் பிரதமருக்கு கடிதம்

தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்தியப் பிரதமருக்கு கடிதம்

தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்தியப் பிரதமருக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2016 | 12:03 pm

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதுடன், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 மீனவர்களையும், 101 படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் கடிதம் எழுத்தியுள்ளார்.

இதுதவிர பாக்கு நீரிணையை அண்மித்து வாழும் இலட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக் குறித்து தன்னுடைய முன்னைய கடிதங்களில் பலமுறை தாம் எடுத்துக்கூறியுள்ளதாக தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொய்வின்றி இடம்பெற்று வருவதாக தனது கடிதத்தில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 7 ஆம் திகதி 3 படகுகளில் கடலுக்குச் சென்ற 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, காங்கேசன்துறையில் தடுத்து வைத்துள்ளதாகவும் ஜெயலலிதா ஜெயராம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தகுந்த விளக்கங்களுடன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாம் வழக்கு தொடர்ந்துள்ளதுடன், அந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கச்சத்தீவு விடயத்தில் இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கோடு, முடிந்துவிட்ட ஒரு விவகாரம் என மத்திய அரசு கருதக்கூடாது என்பதே தமிழகத்தின் நிலைப்பாடு என்றும் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.

கச்சத்தீவை மீட்பதன் மூலமே தமிழக மீனவர்கள் பாக்கு நீரிணையில் தங்கள் பாரம்பரிய மீன்பிடியை முன்னெடுப்பதுடன், வாழ்வாதார உரிமையை அமைதியான முறையில் பெற்று பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணமுடியும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் விருப்பங்களை தூதரக ரீதியில் இலங்கை அரசிடம் கடுமையாக மத்திய அரசு எடுத்துரைக்க வேண்டும் என மீ்ண்டும் தாம் வலியுறுத்துவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதார விவகாரத்தில் நிலையான தீர்வைக் காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வெளிவிவகார அதிகாரிகளுக்கு உடனடியாக பிரதமர் பணிப்புரை விடுக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா ஜெயராம் தனது கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்