தப்பிச் சென்ற சிறுமிகள் மூவரை மீண்டும் சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

தப்பிச் சென்ற சிறுமிகள் மூவரை மீண்டும் சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2016 | 7:07 pm

புத்தளம் – மதுரங்குளியிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமிகள் மூவரையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மதுரங்குளி பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றிலிருந்து இன்று காலை மூன்று சிறுமிகள் தப்பிச் சென்று மதுரங்குளி பொலிஸ் காவலரணில் தஞ்சமடைந்தனர்.

அதனையடுத்து, மூன்று சிறுமிகளும் மதுரங்குளி பொலிஸாரினால் முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

14, 16 மற்றும் 17 வயதான மூன்று சிறுமிகளே சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சிறுவர் இல்லத்தில் துன்புறுத்தல்கள் அதிகரித்தமையாலேயே தப்பிச் செல்ல முயற்சித்ததாக குறித்த சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுமிகளின் முறைப்பாடு தொடர்பில் அவர்கள் தங்கியிருந்த சிறுவர் இல்லப் பொறுப்பாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

பொய்க் காரணங்களைக் கூறி இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், சிறுவர் இல்லத்தில் இதுவரை எவ்வித துன்புறுத்தல் சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டார்​.

சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக அரசின் அனுமதியுடன் குறித்த சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாகவும் இவ்வாறான எவ்வித சம்பவங்களும் குறித்த காலப்பகுதிக்குள் இடம்பெறவில்லை எனவும் சிறுவர் இல்ல அதிகாரி தெரிவித்தார்.

பொலிஸ் விசாரணைகளை அடுத்து சிறுமிகள் மூவரும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த மூன்று சிறுமிகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மூன்று சிறுமிகளில் ஒரு சிறுமி மீண்டும் தான் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திற்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்ததையடுத்து, மீண்டும் அதே சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மற்றைய இரு சிறுமிகளும் வெவ்வேறு இரு சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் நீதவான் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்