தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 11:33 am

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 95 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி தமிழக முதலமைச்சர், பாரத பிரதமருக்கு கடிதத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள், தமது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது மிகவும் கவலையளிக்கும் பிரச்சினையாகும் என ஜெயலலிதா ஜெயராம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை காக்க, நிரந்தர தீர்வு காணவேண்டும் என மத்திய அரசை தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும், இலங்கை படையின் தொடர் நடவடிக்கையால் மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான படகுகளை விடுவிப்பதில்லை என்ற இலங்கை அரசின் யுக்தி, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரதமர் நேரடியாக தலையிட்டு இலங்கை சிறையில் உள்ள 34 தமிழக மீனவர்களையும், அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள 95 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை மீனவர் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் அக்கறை செலுத்தவில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் இராமதாஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து இதுவரையான காலப்பகுதி வரை முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீனவர் பிரச்சினை குறித்து 6 கடிதங்களை அனுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்ததாக த ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்