வட மாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கக் கோரி அடையாள உண்ணாவிரதம்

வட மாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கக் கோரி அடையாள உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 10:32 pm

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி இன்று பேரணியும் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை விவசாயிகளின் நலன் கருதி ஓமந்தையில் இடம் மாற்றி அமைத்துத் தருமாறு வலியுறுத்தி வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த பேரணியொன்று இன்று இடம்பெற்றது.

வவுனியா காமினி வித்தியாலயத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தப் பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை தொடர்ந்தது.

சுற்றுச்சூழலின் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைத்துத்தருமாறு கோரியும் சுலோகங்களைத் தாங்கியவாறு விவசாயிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஆர்.இந்திரராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பேரணியின் நிறைவில் பிரதமரிடம் கையளிக்கும் பொருட்டு மகஜர் ஒன்றை மாவட்ட செயலாளரிடம் விவசாயிகள் கையளித்தனர்.

இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நெடுங்கேணி பிரதேச விவசாயிகள் இன்று அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தியே இந்த உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.​

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்