இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்​றும் செயற்பாடு தடைப்படும் அபாயம் உள்ளது – செய்ட்

இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்​றும் செயற்பாடு தடைப்படும் அபாயம் உள்ளது – செய்ட்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 9:35 pm

அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்​றும் செயற்பாடு தடைப்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள வாய்மூல அறிக்கையின் முன்னோடியாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி அரசியல் தொடர்பில் இடம்பெறுகின்ற மாற்றங்கள் மற்றும் ஆட்சியிலிருக்கும் அரசியல் கூட்டமைப்பிற்குள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகள் காரணமாக எழுந்துள்ள சிக்கலை விரிவடைந்துவரும் அமைச்சரவை புலப்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூகத்திற்கு விடுக்கப்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் சட்டங்களை வலுப்படுத்துதல், சர்வதேச மனித உரிமைகள் பிரடகடனங்களுக்கு அமைய தனிப்பட்ட முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திரதின வைபவத்தில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டமை, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த ஒரு சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகள் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு சான்று பகிர்வதாக இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கமைய, இலங்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதை மனித உரிமைகள் பேரவை ஊக்குவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் ஜெனிவா நகருக்குச் சென்றுள்ளனர்.

இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இணைப்பு அலுவலகத்தின் செயலாளர் மனோ தித்தவெல்ல ஆகியோரும் அடங்குகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்