கைது செய்யப்பட்ட சஜின் டி வாஸ் குணவர்தன விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட சஜின் டி வாஸ் குணவர்தன விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2016 | 8:12 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் , கொழும்பு நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிதித்துய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் தவறிழைத்துள்ளார் என்பதே சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் அளித்த சாட்சியங்களிலும், அவரது வங்கிக் கணக்குகளைப் பரிசோதித்த போது கிடைத்த தரவுகளிலும் முரண்பாடுகள் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

சஜின் டி வாஸ் குணவர்தனவின் வங்கிக் கணக்குகளில் 61 கோடி ரூபா பணம் வைப்பிலுள்ளதாகவும் அவை எவ்வாறு அவருக்கு கிடைத்தது என்பது தொடர்பில் முறையான விளக்கமளிப்பதற்கு அவர் தவறியதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதவானிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் பல தடவைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும் அதன்போது தேவைப்படும் ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர் .

அதனடிப்படையில் அவர் தொடர்பில் போலியான தகவல்களை பெற்றுக் கொள்ளும் வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை சிறை பிடிப்பதே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் நோக்கமென இதன் போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்