வசீம் தாஜுடீன் கொலை வழக்கு: சுமித் பெரேரா, அநுர சேனாநாயக்கவிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வசீம் தாஜுடீன் கொலை வழக்கு: சுமித் பெரேரா, அநுர சேனாநாயக்கவிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2016 | 8:21 pm

ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை தொடர்பில் கைதாகியுள்ள நாரஹேன்பிட்டி பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க ஆகியோர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமது கட்சிக்காரர் பல நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவருக்கு பிணை வழங்க வேண்டுமெனவும் அநுர சேனாநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது அநுர சேனாநாயக்கவுக்கு உள்ள நோய்கள் தொடர்பில் மருத்துவரின் அறிக்கையொன்றினை வழங்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், இன்று அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவத்திற்கு பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்துக்கு நியாயமான அதிகாரமில்லையென இதன் போது நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அநுர சேனாநாயக்கவை நீதிமன்ற மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ அறிக்கையொன்றினை வழங்குமாறு நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தாஜுடீன் கொலை வழக்கு தொடர்பான CCTV கமராக் காட்சிகள் தொடர்பில் பூரண அறிக்கையொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு அதனை கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்