ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் மாகாண சுகாதார அமைச்சில் சந்திப்பு: மத்திய மாகாண சபையில் அமைதியின்மை

ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் மாகாண சுகாதார அமைச்சில் சந்திப்பு: மத்திய மாகாண சபையில் அமைதியின்மை

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2016 | 9:46 pm

அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மாகாண சுகாதார அமைச்சில் நடத்திய சந்திப்பை அடிப்படையாக வைத்து இன்று மத்திய மாகாண சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பின்னர் கோரம் இன்மையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஆகியோரின் தலைமையில் நேற்று மத்திய மாகாண சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு இன்றைய மத்திய மாகாண சபை அமர்வின் போது முதலில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் ஜயதிஸ்ஸ எதிர்ப்புத் தெரிவித்தார்.

பின்னர் அவர் மேலும் சில மாகாண சபை உறுப்பினர்களுடன் சபையில் இருந்து வெளியேறினார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ செங்கோலையும் தூக்கிச் சென்றார்.

பின்னர் சபை மீண்டும் கூடிய போது சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஆளுங்கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய போது சபையில் கோரம் இருக்கவில்லை.

அதனால் மத்திய மாகாண சபை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, மத்திய மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று மாகாண ஆளுநரை சந்தித்து இது தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்