1.5 மீட்டர் நீளமுடைய இருப்புக் கம்பி தலையைத் துளைத்து வெளியேறியும் உயிர் பிழைத்த நபர்

1.5 மீட்டர் நீளமுடைய இருப்புக் கம்பி தலையைத் துளைத்து வெளியேறியும் உயிர் பிழைத்த நபர்

1.5 மீட்டர் நீளமுடைய இருப்புக் கம்பி தலையைத் துளைத்து வெளியேறியும் உயிர் பிழைத்த நபர்

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 4:58 pm

கட்டுமானப் பணியின்போது உயரத்திலிருந்து வீழ்ந்ததில், உடலுக்குள் 1.5 மீட்டர் நீளமுடைய இரும்புக் கம்பி பாய்ந்து தலை வழியாக வெளியேறியும் 46 வயது சீனத் தொழிலாளி அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்.

சீனாவின் ஷான்டாங் பகுதியில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஷாங் என்பவர், 5 மீட்டர் உயரத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை தவறி வீழ்ந்துள்ளார்.

அவர் வீழ்ந்த இடத்தில் இருந்த 1.5 மீட்டர் இரும்புக் கம்பி அவரது உடலுக்குள் பாய்ந்தது.

உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், ஷாங்கின் அடி வயிற்றில் பாய்ந்து தலை வழியாக வெளியேறியிருந்த கம்பியை கட்டுமானப் பகுதியிலிருந்து வெட்டியெடுத்து, அந்தக் கம்பியுடன் அவரை மருத்துமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அந்த மருத்துவமனையில், 9 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் 7 மணி நேரம் போராடி அந்தக் கம்பியை ஷாங்கின் உடலிலிருந்து வெளியே எடுத்தனர்.

இதுகுறித்து சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறியிருப்பதாவது,

”ஷாங் சந்தித்த விபத்து, மிக மிக அபூர்வமானதாகும். அவரது உடலுக்குள் பாய்ந்த கம்பி, இதயம், மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய், ஈரல், மண்டைப் பகுதி, தொண்டை ஆகிய உயிர் ஆதார உறுப்புகளை மிக நெருக்கத்தில் கடந்து சென்றுள்ளது. எனினும், அந்த உறுப்புகளை கம்பி துளைக்கவில்லை.

முக்கிய உறுப்புகளில் ஒன்றை சிதைத்திருந்தால் கூட அவர் உயிர் பிழைத்திருக்க முடியாது.

மேலும், மிகவும் சிக்கலான அந்த சத்திர சிகிச்சையில் சின்னஞ்சிறிய தவறு ஏற்பட்டிருந்தால் கூட அது அவரது உயிருக்கு ஆபத்தாகியிருக்கும். எனினும், 7 மணி நேரம் போராடி மருத்துவர்கள் அந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.”

முக்கியமான உறுப்புகள் சேதமடைந்திருக்காவிட்டாலும், ஷாங்குக்கு ஏற்பட்ட காயம் மிகப் பெரியது. அவர் திடகாத்திரமானவராக இருந்திருக்காவிட்டால் அந்தக் காயம் காரணமாகவே அவர் இறந்திருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்திர சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஷாங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், கிருமித் தொற்று ஏற்பட்டு அவரது உடல் நிலை மோசமடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்