”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணம், புத்தளம், கண்டியில் முன்னெடுப்பு

”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணம், புத்தளம், கண்டியில் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 9:56 pm

உங்களது வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதன் பிரதிபலனை உங்களுக்கு வழங்கியுள்ளனரா?

இது தொடர்பில் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டத்தினூடாக தெளிவூட்டல் வழங்குவதற்கான நியூஸ்பெஸ்ட்டின் மக்கள் சேவை யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

நீங்கள் அளித்த பெறுமதியான வாக்கிற்கு பலன் கிடைத்துள்ளதா, என்ற கேள்வி யாழ். மக்களிடம் முன்வைக்கப்பட்டது.

யாழ். குடாநாட்டிலுள்ள நியூஸ்பெஸ்ட் குழுவினர் இரு குழுக்களாகப் பிரிந்து, மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர்.

பருத்தித்துறை, நெல்லியடி, அச்சுவேலி, காங்கேசன்துறை, மாதகல், இளவாலை, சங்கானை மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் மீண்டும் சிந்தியுங்கள் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் துண்டுப்பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.

யாழிலுள்ள மற்றைய குழுவினர், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, வேலணை, மிருசுவில் மற்றும் புளியங்கூடல் பகுதிகளுக்குச் சென்று மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

இதன்போது மீண்டும் சிந்தியுங்கள் திட்டத்தினூடாக ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

இதேவேளை, கண்டி- மத்திய சந்தை பகுதியிலிருந்து ஒரு குழுவினர் இன்றைய பயணத்தை ஆரம்பித்தனர்.

நீங்கள் தெரிவு செய்தவர்கள், எதிர்பார்த்த நோக்கத்தினை நிறைவேற்றினார்களா, என்ற கேள்விக்கு மக்கள் வழங்கிய பதில்கள் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டது.

மஹய்யாவ, நித்தவெல மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளுக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்று மக்களை சந்தித்தனர்.

மற்றுமொரு குழுவினர் கண்டி மாவட்டத்தின் அம்பிட்டிய, தலாத்துஓயா, மாரஸ்ஸன மற்றும் அதுல்கம ஆகிய கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தனர்.

மற்றுமொரு குழுவினர் புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளுக்குச் சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்