மஹியங்கனையில் மாணவி கொலை: துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருக்கலாமென சந்தேகம்

மஹியங்கனையில் மாணவி கொலை: துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருக்கலாமென சந்தேகம்

எழுத்தாளர் Bella Dalima

18 Jun, 2016 | 8:54 pm

மஹியங்கனை – குடாலுணுக கிராமத்தில் 9 வயது சிறுமியொருவர் நேற்று (17) மாலை கொலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.

மஹியங்கனை – ரிதிமாலியத்த – குடாலுணுக கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி பயின்ற மல்கி சதமிலியின் சடலம், நேற்று மாலை 5 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவிலுள்ள, உல்ஹிடிய ஓயாவிற்கு அருகிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்குச் செல்லும் இடைப்பட்ட நேரத்திலேயே சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வழமையாக பஸ்ஸில் இருந்து இறங்கி சகோதரியுடன் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் சதமிலி, நேற்றைய தினம் ஏதோவொரு காரணத்தினால் சகோதரியைத் தவறவிட்டுள்ளார்.

பிற்பகல் இரண்டு மணி கடந்தும் சிறிய மகள் வீட்டிற்கு வராதமையினால், பெற்றோர் அயலவர்களின் உதவியுடன் மகளைத் தேடிச் சென்றுள்ளனர்.

மாலை 5 மணியளவில் சிறுமியின் சடலத்தை நீரோடையொன்றில் அவர்கள் கண்டனர்.

சதமிலியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில்​ கைகள் கட்டப்பட்டிருந்ததுடன், பாதணிகள் மற்றும் பாடசாலை பை ஆகியன சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் இருந்து மீட்கப்பட்டன.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு நேற்றிரவு சென்றிருந்த நீதவான், முதற்கட்ட விசாரணைகளை நிறைவு செய்து, பிரதேச பரிசோதனைகளுக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தார்.

சதமிலியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், குற்றவாளிகளைத் தேடி நேற்றிரவு முதல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மோப்ப நாயின் ஊடாக பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முனனெடுத்த சந்தர்ப்பத்தில், சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலுள்ள, சதமிலி கல்வி பயின்ற பாடசாலைக்கு அருகில் மோப்ப நாய் நின்றதாக பொலிஸார் கூறினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்