இந்தோனேஷியக் கடலில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

இந்தோனேஷியக் கடலில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2016 | 7:02 pm

இந்தோனேஷியாவின் அச்சே கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண் ஒருவர், 9 சிறார்கள் உள்ளிட்ட 44 பேர் இந்தப் படகில் உள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவின் அச்சே கடற்பிராந்தியத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுக்கும் நோக்கில் அந்நாட்டு உப ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படகிலுள்ளவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குவதற்கும் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடவுச்சீட்டுக்களோ அல்லது பயண ஆவணங்களோ இன்றி இவர்கள் பயணித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான எவரையும் தமது நாட்டிற்குள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், படகிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலை தொடர்பில் தமக்கு எவ்வித கவலையும் இல்லை எனவும் அவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகளாகவே கருதுவதாகவும் இந்தோனேஷிய குடிவரவுத்துறை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை தரையிறங்குவதற்கும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளை சந்திப்பதற்கும் அனுமதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமென சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் அச்சேவிலுள்ள பொது அமைப்பு என்பன கூட்டாக இந்தோனேஷிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

இதனிடையே, குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களில் உள்ள பெண்கள், படகிலிருந்து அந்த நாட்டின் தரையில் இறங்க முயற்சித்தமைக்கு எதிராக அதிகாரிகளால் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் படகிலுள்ளவர்களில் 17 பேர் தமிழக அகதி முகாமிலிருந்து சென்றுள்ளவர்கள் என்பது அடையாளங் காணப்பட்டுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பொருளாளர் எஸ்.சி.சந்திரஹாசன் நியூஸ்பெஸ்ட்டுக்குக் குறிப்பிட்டார்.

எனினும், இந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் படகை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் பட்சத்தில் அடையாளங் காணப்பட்டவர்களை மாத்திரமே இந்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் நிலை காணப்படுவதாகவும் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதி முதல் இந்தோனேஷிய அதிகாரிகளால் படகு கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் சுகவீனமுற்ற பிள்ளையொன்றுடன் தரையிறங்குவதற்கு அனுமதிக்குமாறு 5 பெண்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த 44 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களும் இந்தோனேஷியாவின் அச்சே கடற்பிராந்தியத்தில் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்