சோமவன்ச அமரசிங்க காலமானார்

சோமவன்ச அமரசிங்க காலமானார்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2016 | 10:57 am

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது 73 ஆவது வயதில் இன்று இயற்கை எய்தினார்.

நாட்டின் புரட்சிகர அரசியலில் முன்னோடியாக செயற்பட்ட சோமவன்ச அமரசிங்க ரோஹன விஜேவீரவுடன் இணைந்து மக்கள் விடுதலை முன்னணியை ஸ்தாபிப்பதற்கு பங்களிப்பு செய்து முன்னணியின் நான்காவது தலைவராகும் செயற்பட்டார்.

1988 – 1989 ஆம் ஆண்டு கலவரத்தின் போது விஜேவீர கொலை செய்யப்பட்டதை அடுத்து இரசகியமாக நாட்டிலிருந்து தப்பிச் சென்று வௌிநாட்டில் வசித்து வந்த அவர் மக்கள் விடுதலை முன்னணியை மீள கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு பெரும் பங்காற்றினார்.

தனது வாழ்நாள் முழுவதையும் அரசியலுக்காக அர்ப்பணித்த சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

இலண்டனிலிருந்து நாடு திரும்பிய அவர் மக்கள் விடுதலை முன்னணிக்கு தலைமைத்துவத்தை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலரை உருவாக்கி முன்னணியை வலுவான கட்சியாக மறுசீரமைத்தார்.

மக்கள் விடுதலை முன்னணியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்ற சோமவன்ச அமரசிங்க 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கட்சியின் தலைமைத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைத்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது.

பின்னர் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய அவர் வேறு அரசியல் பாதையூடாக தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டினை மக்கள் மத்திக்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்