இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவி 

இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவி 

இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவி 

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2016 | 4:57 pm

அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக படகு மூலம் சென்று கொண்டிருந்த போது இந்தோனேஷிய பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட இலங்கையர்களுக்குத் தேவையான நலன்புரி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியாவிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும், அந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் படகிலுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என இந்தோனேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் தர்ஷன பெரேரா குறிப்பிட்டார்.

புகலிடக் கோரிக்கையாளர் படகு தொடர்ந்தும் கடலில் இந்தோனேஷிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் கூறியுள்ளார்.

இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் படகில் 44 இலங்கையர்களும் ஏனைய நாட்டு பிரஜைகளும் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு, இயந்திரக் கோளாறு காரணமாக சுமத்திராவிற்கு வடக்கே அமைந்துள்ள இந்தோனேஷிய கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்தோனேஷிய அதிகாரிகளால் கடந்த ஞாயிற்றுக்கிழமை படகிலிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர்.

அத்துடன், படகிலிருந்து மீட்கப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இன்மையினால் இவர்கள் தொடர்ந்தும் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்