பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

09 Jun, 2016 | 7:16 pm

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு, எதிர்வரும் 11ஆம் திகதியுடன் 25 ஆண்டுகளாகின்றமையை இரா.முத்தரசன் தமது அறிக்கையில் ஞாபகப்படுத்தியுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் அவர்களை விடுதலை செய்ய சட்டத்தில் வழிவகைகள் உள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

எஞ்சிய காலத்தில் அவர்கள் பெற்றோர்களுடன் வாழ வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை கிடைப்பதற்கு முன்னர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் பிணையில் விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டணையாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்