யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 35 ஆண்டுகள்

யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 35 ஆண்டுகள்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2016 | 7:25 pm

கம்பீரமாய்க் காட்சியளிக்கும் யாழ். நூலகத்தின் கருகிய புத்தகங்களின் மணத்தை வாசிப்பின் மீது தீராக்காதல் கொண்ட வாசகர்களால் மாத்திரமே நுகரமுடியும்.

அறியாமை இருளகற்றும் புத்தொளிக்கீற்றை இன்று போன்றதோர் நாளின் நள்ளிரவு வேளை, காரிருளில் மூழ்கடித்த கதையை மீட்ட மீட்ட சோகமே எஞ்சும்.

கவர்ந்து செல்லவோ சூறையாடவோ முடியாத தென்னாசியாவின் அறிவுப்பொக்கிஷத்தை தீது, நன்கறியாத தீ தீண்டி துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் வசப்படுத்துவது அத்துணை எளிதன்று.

1933 ஆம் ஆண்டு அறிவறம் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை, சில காலத்தில் பெருவிருட்சமாய் அறியாமை இருள் களையும் யாழ். நூலகமாய் நிமிர்ந்து நின்றது.

புராதனத்தைப் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்.

1800களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மைவாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் வீறுடன் விளங்கியது யாழ். நூலகம்.

இருப்பின் அடையாளத்தை அரிக்கும் கறையான்கள், பழம்பெருமையை அழிக்க தீ வடிவம் கொண்டு யாழ். நூலகத்தைப் பற்றின.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை, தென்னாசியாவின் அறிவுக் களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்க ஆரம்பித்தன.

பற்றிய எப்பொருளுக்கும் தன் வடிவம் கொடுக்கும் தீ அறிவுப் பசிக்கு விருந்தாகும் புத்தகங்களை உண்டு தன்பசி தணித்தது.

சுமார் ஒரு இலட்சம் புத்தகங்கள் நிறம்மாறி மணம்மாறி உருச்சிதைந்து சாம்பராயின.

35 ஆண்டுகள் உருண்டோடின. காயங்களை ஆற்றும் காலம் நூலகத்தின் உருவை இன்று மாற்றியுள்ளது.

காலத்திற்கேற்ப அச்சில் வலம் வந்த புத்தகங்கள் இன்று கணனியில் தரவேறி இணையத்தில் இரண்டறக்கலந்து யாழ். நூலகத்தில் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பழந்தமிழ் ஏட்டுச்சுவடிகளும் மூலநூல்களும் தீக்கிரையாக்கப்பட்ட துன்பியலை மறப்பதற்கு, புத்தகங்களை அன்பளிப்பு செய்ய முன்வருவோம்.

புதைத்தாலும் முளைத்து எரித்தாலும் உயிர்க்கும் வரலாற்றை அழித்தல் அத்தனை எளிதன்று.

“புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே”

– விளாடிமிர் லெனின்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்