மர்மமான முறையில் இறந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நஞ்சு கலந்த மது காணப்பட்டதாக உறுதி

மர்மமான முறையில் இறந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நஞ்சு கலந்த மது காணப்பட்டதாக உறுதி

மர்மமான முறையில் இறந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நஞ்சு கலந்த மது காணப்பட்டதாக உறுதி

எழுத்தாளர் Staff Writer

30 May, 2016 | 5:37 pm

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

தமிழ், மலையாள சினிமா உலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் கலாபவன் மணி (வயது 45) கடந்த மார்ச் 6 ஆம் திகதி திடீரென மரணமடைந்தார். கல்லீரல் பிரச்சினை காரணமாக ஆபத்தான நிலையில் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

சம்பவத்துக்கு முன்தினம் தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால்தான் கலாபவன் மணி இறந்ததாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் அவரது நண்பர்களான நடிகர் ஜாபர், ஷாபு உள்பட சிலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவரது உடலில் பூச்சி மருந்து இருந்ததாகவும், மெத்தில் ஆல்கஹால் எனப்படும் மெத்தனால் இருந்ததாகவும் இருவேறு தகவல்கள் வெளியானது. இதனால் கலாபவன் மணியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தது.

எனவே கலாபவன் மணியின் உடல் பாகங்களை தடயவியல் சோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்துக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர். அங்கு கலாபவன் மணியின் உடல் பாகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதற்கிடையே கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். எனவே இந்த மர்மமான மரணத்தில் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கலாபவன் மணியுடன் மது அருந்தியவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் இந்த வழக்கில் பொலிஸாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணை மந்தமடைந்தது.

இந்த நிலையில் ஐதராபாத் தடயவியல் துறை கலாபவன் மணியின் உடல்கூறு சோதனை முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில் கலாபவன் மணியின் உடலில் மெத்தில் ஆல்கஹால் எனப்படும் நச்சு கலந்த மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

கள்ளச்சாராயம் எனப்படும் போலி மதுவில் போதைக்காக சேர்க்கப்படும் இந்த மெத்தனால் நச்சுப்பொருள் ஆகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் இது எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படும். அப்படித்தான் கலாபவன் மணியின் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளதாக தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.

தடயவியல் துறையின் இந்த அறிக்கையால் கலாபவன் மணியின் சாவில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கலாபவன் மணிக்கு நச்சு கலந்த அந்த மதுவை கொடுத்தது யார்? என பொலிஸார் விசாரணையை முடுக்கி விட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்