வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 8:49 pm

கடல் நீரில் விளக்கெரியும் அதிசயம் மிகுந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா ​நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

வடக்கே முல்லையும் மருதமும் ஒருங்கே அமையப்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களை அயற்கிராமங்களாகக் கொண்டுள்ளதோடு நந்திக்கடலும் வயல்வெளிகளும் சூழ இவ்வாலயம் அமைந்துள்ளது.

அடங்காப்பற்று என அழைக்கப்படும் வன்னிப் பிரதேசத்தை ஆண்ட வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட இவ்வாலயத்தை போர்த்துக்கேயர் காலத்தில், போர்த்துக்கேய தளபதியாகிய நெவில் என்பவன் அழிக்க முற்பட்ட போது ஆலயத்தில் நின்ற பனிச்சை மரம் தனது காய்களை வீசி ஆலயத்தை அழிக்க விடாது தடுத்தமையை வரலாறு மூலம் அறிய முடிகிறது.

முல்லைத்தீவில் ஆரம்ப காலத்தில் விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் வழிபாடானது பின்னர் வாரம் ஒருநாள் என்ற வழிபாடாகி பின்னர் வேதாகம வழிப்படி முறையான பூசைகளுடன் இடம்பெற்றது.

பல ஐதீகங்களைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழாவில் காவடி மற்றும் பறவைக் காவடி, கற்பூரச்சட்டி எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் அருள் வேண்டி நாடு முழுவதிலும் உள்ள பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்