மண்சரிவு அபாயம் நீடிக்கும் நிலையில் நாங்கள் எங்கு செல்வது: இடம்பெயர்ந்துள்ள மக்கள் கேள்வி

மண்சரிவு அபாயம் நீடிக்கும் நிலையில் நாங்கள் எங்கு செல்வது: இடம்பெயர்ந்துள்ள மக்கள் கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 7:58 pm

மண்சரிவு அபாயம் ஏற்படுகின்ற போதெல்லாம் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்படுவதும் பின்னர் மீண்டும் அபாயம் மிகுந்த அதே இடங்களுக்கு மக்கள் திருப்பி அனுப்பப்படுவதும் மலையகத்தில் வழமையாகிவிட்டது.

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்படுகின்ற போதெல்லாம் எங்கு செல்வது என திண்டாடும் நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நாவலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவின் சோலகந்த பகுதி மக்கள் சோலகந்த தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.

எனினும், பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதால் அம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.

எனினும், தமது பகுதியில் தொடர்ச்சியாக மண்சரிவு அபாயம் நிலவுவதால் இந்த மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்துள்ளவர்கள் மண்சரிவு அபாயம் நீடிக்கும் நிலையில் தாம் எங்கு செல்வதென கேள்வி எழுப்பினர்.

மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த யட்டியந்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பணாவத்த நான்காம் இலக்க குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் தோட்டத் தொழிற்சாலையில் தங்கியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக 10 குடும்பங்கள் இவ்வாறு தற்காலிகமாகத் தங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

யட்டியந்தோட்டை – அல்கொல்ல பகுதியிலும் மண்சரிவு அபாயம் காரணமாக 180 பேர், அல்கொல்ல தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

இதேவேளை, யட்டியந்தோட்டை கொல்பிட்டிய அம்பருக்காராம விகாரையில் 28 குடும்பங்கள் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட 84 பேர் இவ்வாறு தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

1989ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் தாம் பாரிய அனர்த்தத்தை எதிர்நோக்கியிருந்ததாக இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

புதிய வீடுகள் வழங்கப்படும் என அன்று அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்