கொழும்பின் சில பகுதிகள் தொடர்ந்தும் வௌ்ளத்தில்

கொழும்பின் சில பகுதிகள் தொடர்ந்தும் வௌ்ளத்தில்

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 9:43 pm

கொழும்பின் சில பகுதிகள் தொடர்ந்தும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

அடிக்கடி பெய்யும் மழை கொழும்பு – மீதொட்டமுல்லை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

பல நாட்களாக வீடுகளை மூடிவிட்டு வெளியேறியிருந்த மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு இன்னும் முடிவு கிடைக்கவில்லை.

கொழும்பு குப்பை மேட்டினால் அவதியுறும் மீதொட்டமுல்ல மக்கள் கடும் மழையின் பின்னர் அதிக துயரை எதிர்கொள்கின்றனர்.

வௌ்ளத்தில் மிதந்து வந்த குப்பை மக்களை இடம்பெயர வைத்துவிட்டு வீடுகளில் தேங்கி நின்றன.

வௌ்ளம் வடிந்தோடிய பின்னர் தமது வீடுகளுக்குத் திரும்பிய மீதொட்டமுல்ல மக்கள் வீடுகளுக்குள் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு வாரத்திற்கும் அதிகக்காலம் வீட்டை விட்டுச் சென்றிருந்த அஸ்லம், இன்று மதியம் மெகாட – கொலன்னாவையில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார்.

வாழ இடமின்றி ஒரு வாரகாலம் சிரமத்தை எதிர்கொண்ட இவர், பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வீட்டினைத் திறந்தார்.

எனினும், மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு இயற்கை கருணை காட்டியிருக்கவில்லை.

வாழ்நாள் முழுவதும் உழைத்து சேகரித்த சொத்துக்கள் அழிவடைந்து காணப்பட்டன.

ஆகக்குறைந்தது பிள்ளைகளின் பாடப்புத்தகங்கள் கூட மீதமாக இருக்கவில்லை.

அஸ்லமின் வீடு மாத்திரம் அல்ல, மெகாட – கொலன்னாவையில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளினதும் நிலை இவ்வாறே அமைந்துள்ளது.

மின் உபகரணங்கள், வாகனங்கள் மட்டுமல்ல மக்களின் ஆடைகளும் வௌ்ளத்தில் மூழ்கிவிட்டன.

வௌ்ளம் காவி வந்த கழிவுப் பொருட்கள் வீடுகளில் இன்று தேங்கியுள்ளன.

எஞ்சியுள்ள சொத்துக்களையாவது சுத்தம் செய்து பயன்படுத்தும் எதிர்பார்ப்பில் மக்கள் அவற்றை சுத்தம் செய்து வருகின்றனர்.

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்த பொல்வத்தை பகுதி மக்கள் இன்று வீடு திரும்பிய போதிலும், வீடுகளில் சேறும் சகதியுமே காணப்பட்டன.

சிறு வியாபாரம் மூலம் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் பலர் தமது எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒரு புறம் வௌ்ளம் வடிந்து சென்றாலும் கொழும்பின் சில பகுதிகளில் இன்னும் வௌ்ள நீர் தேங்கிக் கிடக்கிறது.

மொகடகொல்லான, பொல்வத்த, மீதொடமுல்ல உள்ளிட்ட பல பகுதிகளின் தாழ் நிலப்பகுதிகள் இன்றும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் வீடுகளுக்குத் திரும்ப முடியாத பலர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

வெல்லம்பிட்டிய வித்தியாவர்தன கல்லூரியில் 1348 பேர் தங்கியுள்ளனர்.

இவர்களில் 457 பிள்ளைகளும் அடங்குகின்றனர்.

கொலன்னாவை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் பாடசாலைகள் திறக்கப்படவில்லை.

பாடசாலை நாளான இன்று கல்வி நடவடிக்கைகளுக்குப் பதிலாக அவை மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் முகாம்களாக மாறியுள்ளன.

களனி கங்கை, வர்த்தக தலைநகரான கொழும்பை ஒரு சில மணித்தியாலங்களில் மூழ்கச் செய்தது.

தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினதும் உதவிக் கரங்களையே இந்த மக்கள் நாடியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்