உலக வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

உலக வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 7:02 pm

உலக வங்கியின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை சந்தித்தனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் உலக வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காகவும் நிபந்தனையின் கீழ் வழங்கப்படும் கடன் வசதிகளின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் உலக வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் சிலர் 34 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிகளை மேலும் நான்கு வருடங்களுக்கு இலகு கொள்கையின் கீழ் வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய வருமானமீட்டும் நாடுகளுக்கு கடனுதவிகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை மீள பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

உலக வங்கி இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கிய நிதியுதவிகள் தொடர்பில், சில மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்