உலகின் முதலாவது மனிதநேய மாநாட்டில் விசேட உரை நிகழ்த்த கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திற்கு அழைப்பு

உலகின் முதலாவது மனிதநேய மாநாட்டில் விசேட உரை நிகழ்த்த கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திற்கு அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 9:02 pm

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறுகின்ற முதலாவது உலக மனிதாபிமான மாநாட்டின் நிறைவு விழாவில் விசேட உரை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திற்கு இன்று கிட்டியது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கான அழைப்புக் கிடைத்த இலங்கையின் ஒரேயொரு தனியார் நிறுவனம் என்ற பெருமை கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தையே சாரும்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் அவசர நிவாரணங்கள் தொடர்பிலான ஐ.நா. உதவி செயலாளர் ஸ்டீவன் ஓபிரயன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்ட நிர்வாகியும் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமருமான ஹெலன் கிளார்க் ஆகியோர் தலைமையில் நிறைவு விழா நடைபெற்றது.

உலகின் முதலாவது மனிதாபிமான மாநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் ஒரேயொரு தனியார் நிறுவனமான வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் சார்பில் அதன் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் இதன்போது விசேட உரை நிகழ்த்தினார்.

பிராந்தியத்தில் தனியார் துறை மற்றும் அதன் ஈடுபாடு என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.

ஃபிஜி பிரதமர் ஃப்ரான்க் பைனமராமா, பெல்ஜியத்தின் பிரதிப் பிரதமர் அலெக்ஸாண்ட்ரா டீ குரூ உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களின் பிரதானிகள், வர்த்தக சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் இம்மாநாட்டில் உரையாற்றினர்.

அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களின் பிரதிநிதிகள் 57 பேர் உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 6000 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

மனிதாபிமான தேவைகளின்போது கையாளவேண்டிய சிறந்த முறைமை தொடர்பில் இதன்போது இணக்கப்பாடு காணப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய நெருக்கடி தற்போது உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

நிவாரணங்கள், உதவிகள் மற்றும் தேவைகளை எதிர்பார்த்து சுமார் 130 மில்லியன் பேர் தற்போது இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்