அரநாயக்க மண் சரிவு அனர்த்தம்: 15 பேரின் சடலங்கள் மீட்பு

அரநாயக்க மண் சரிவு அனர்த்தம்: 15 பேரின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

18 May, 2016 | 9:19 pm

அரநாயக்க, சிறிபுர மலைத்தொடரில் ஏற்பட்ட மண் சரிவில் காணாமற்போனவர்களில் 15 பேரின் சடலங்கள் இன்று பிற்பகல் அளவில் மீட்கப்பட்டன.

காணாமற்போனவர்களின் எண்ணிக்கையை உறுதியாகக் கூற முடியாதுள்ளதாக அரநாயக்க பிரதேச செயலாளர் ஏ.எம். பைசர் கூறினார்.

சிறிபுர மலைத்தொடரில் நேற்று மாலை இடம்பெற்ற மண் சரிவில் பல கிராமங்கள் மண்ணில் புதையுண்டன.

அனர்த்தம் இடம்பெற்றவுடன் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த நியூஸ்பெஸ்ட் குழு, எலங்கபிட்டிய மற்றும் பல்பேபாஹே ஆகிய கிராமங்கள் மண் சரிவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை அவதானித்தது.

எலங்கபிட்டிய பகுதியில் 1504 பேரும், பல்லேபாஹே பகுதியில் 1792 பேரும் வசிப்பதாக பிரதேச செயலாளர் ஏ.எம். பைசர் தெரிவித்தார்.

அவர்கள் வாழ்ந்து வந்த 66 வீடுகளும் முற்றாக அழிவடைந்துள்ளன.

இந்தக் கிராமத்தில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளிகளாவர்.

நேற்று மாலை 5 மணியளவில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் நொடிப்பொழுதில் இயற்கையின் சீற்றத்தால் சிதைவடையப் போகிறோம் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மலைத் தொடரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்துக்கு மண் சரிவின் பாதிப்பு காணப்பட்டதுடன் கற்பாறைகளும் சரிந்து கிடந்தன.

கிராமங்களுக்கு செல்லும் வீதியில் நீரோடை ஊற்றுக் காணப்பட்டதாலும் அந்தப் பகுதி இருளில் மூழ்கியிருந்ததாலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் மிகவும் சிரமமாகவிருந்தன.

கடும் சிரமங்களால் காணாமற்போனவர்களைத் தேடும் பணியை இன்று காலையே ஆரம்பிக்க ​வேண்டியிருந்தது.

விமானப்படை, கடற்படை, இராணுவம் என முப்படை வீரர்களின் கடும் பிரயத்தனத்துடன் 15 பேரின் சடலங்களை மீட்க முடிந்தது.

அந்த 15 பேரில் 8 பேர் பெண்கள்.

மீட்புப் பணிகள் மற்றும் காணாமற்போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவ்விடத்திற்கு சமூகமளித்திருந்தார்.

சிறிபுர மண்சரிவில் காணாமற்போன ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான மூன்று இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அரநாயக்க பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்