கூலித்தொழிலால் ஜீவியம் நடத்தும் மன்னார் ஹில்லரி அணியினர் FA கிண்ணக் கால்பந்தாட்ட காலிறுதிக்குத் தகுதி

கூலித்தொழிலால் ஜீவியம் நடத்தும் மன்னார் ஹில்லரி அணியினர் FA கிண்ணக் கால்பந்தாட்ட காலிறுதிக்குத் தகுதி

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2016 | 7:07 pm

வான் வியக்கும் திறமை இருந்தும் வாழ்வதற்காக கூலித்தொழில் செய்து கொண்டு விளையாட்டிலும் சாதிக்கும் வீரர்கள் இருக்கவே செய்கின்றனர்.

FA கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மன்னார் ஹில்லரி கழகம் இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.

1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹில்லரி விளையாட்டுக் கழகம் வட மாகாணத்தில் திறமை வாய்ந்த கால்பந்தாட்ட அணியைக் கொண்டுள்ளது.

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக் சாம்பியன் பட்டத்தை 2011, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சூடிய பெருமை ஹில்லரி கழகத்துக்கு உண்டு.

எவ்வாறாயினும், ஹில்லரி கால்பந்தாட்டக் கழகத்துக்காக விளையாடும் வீரர்கள் கூலித் தொழிலை நம்பியே தம் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.

மீன்பிடி, மேசன், தச்சு உதவியாளர் போன்ற அன்றாட கூலி வேலைகளே இவர்களின் வாழ்வாதாரமாகவுள்ளது.

போதாக்குறைக்கு இவர்கள் பயிற்சி செய்யும் மைதானதும் அதற்கு உகந்தவொன்றாக இல்லை.

ஆனாலும், ஹில்லரி கால்பந்தாட்ட அணி வீரர்களுக்கு மகுடம் சூடுவதாய் இந்த முறை FA கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் அமைந்துள்ளன.

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த FA கிண்ணப் போட்டிகளில் காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை எஸ். ஸ்டெனிஷ்லஸ் தலைமையிலான ஹில்லரி அணி பெற்றுள்ளது.

ஹில்லரி கழக அணி FA கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடிய முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த இலக்கை அடைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

ஹில்லரி விளையாட்டுக் கழகத்தின் அலுவலகத்தின் நிலை அதன் பொருளாதார தரத்தை உணர்த்துவதற்குப் போதுமானதாய் உள்ளது.

சிறந்த மைதானமும் ஊக்குவிப்பும் கிடைத்தால் தம்மால் நிச்சயமாக இலங்கை கால்பந்தாட்ட அணியில் இடம்பெற முடியும் என்பது இவர்களின் நம்பிக்கை.

இந்த வீரர்களுக்கு உந்துசக்தி அளிப்பதன் மூலம் இலங்கையில் கால்பந்தாட்டத்தை மேம்படுத்த முடியும் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்வார்களா?

எவ்.ஏ கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் நடப்பு சாம்பியனான கொழும்பு FC அணியைக் காலிறுதியில் ஹில்லரி அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப்போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நாளை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்