வித்தியா கொலை வழக்கு: ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

வித்தியா கொலை வழக்கு: ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

வித்தியா கொலை வழக்கு: ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 12:45 pm

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் 09 ஆவது சந்தேகநபர் , பொலிஸ் பிடியிலிருந்து விடுபட்டு கொழும்புக்கு தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற போதே , நீதவான் ஏ.எம்.எம். றியாழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஒன்பதாவது சந்தேகநபர் எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச் சென்றார் என்பது தொடர்பிலும் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவருடைய தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி வித்தியாவின் மரபனு பரிசோதனை அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த பரிசோதனைக்காண கட்டணத்தை குற்றப் புலனாய்வு திணைக்களம் செலுத்தாமையே அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட காரணம் என ஜீன்டெக் நிறுவனத்தினர் கடந்த நான்காம் திகதி நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

அந்தப் பணத்தை செலுத்தி அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு மாணவி வித்தியாவின் குடும்பத்தார் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரே ஆய்வறிக்கைகான பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்த நீதவான் சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வித்தியாவின் தாயாருக்கு சந்தேகநபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஊர்காவற்துறை நீதவான் ஒத்தி வைத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்