போர்க்குற்ற வழக்கில் வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவருக்கு மரண தண்டனை உறுதி

போர்க்குற்ற வழக்கில் வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவருக்கு மரண தண்டனை உறுதி

போர்க்குற்ற வழக்கில் வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவருக்கு மரண தண்டனை உறுதி

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2016 | 3:49 pm

1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, வங்கதேச பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

வங்கதேசத்தில் 1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்துகொண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் பாலியல் பலாத்காரம், புலனாய்வு அதிகாரிகளைக் கொலை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிஜாமி மீது சுமத்தப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014 இல் அறிவித்திருந்தது. அதனை எதிர்த்து நிஜாமி மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதன்போது, உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. “மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது” என ஒற்றை வரியில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே நிஜாமுக்கு இருக்கிறது. ஆனால், இதற்கு முன்னர் போர்க்குற்றம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார்.

எனவே, மொடியூர் ரஹ்மான் நிஜாமி மரண தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்