வித்யா படுகொலை: தம் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக மறுப்பதாக சந்தேகநபர்கள் நீதிமன்றில் தெரிவிப்பு

வித்யா படுகொலை: தம் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக மறுப்பதாக சந்தேகநபர்கள் நீதிமன்றில் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 6:00 pm

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மரபணு அறிக்கையை எதிர்வரும் தவணைகளின்போது சமர்ப்பிக்கவுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின்போது வித்யா கொலை தொடர்பான மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் ஜீன்டெக் நிறுவன அதிகாரியை ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலைமையின் கீழ், வித்யா படுகொலை குறித்த மரபணு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டமைக்கான பணத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவு இதுவரை தமக்கு வழங்காமையினாலேயே அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம் நிலவியிருந்ததாக ஜீன்டெக் நிறுவனம் சார்பாக இன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காரணங்களைத் தெளிவுபடுத்தி ஜீன்டெக் நிறுவனத்தின் சார்பாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியூடாக நீதிமன்றத்துக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வித்யா படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாமை குறித்தும் இன்று நீதவான் வினவியிருந்தார்.

தாம் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் வாதிட முன்வர மாட்டார்கள் எனவும், சட்டத்தரணிகளை நாடினால், அவர்கள் மறுப்பு தெரிவிப்பதாகவும் சந்தேகநபர்கள் நீதவானின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

இந்த நிலைமையில் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் வாதாட முடியுமென தெரிவித்த நீதவான், அதுகுறித்து சிந்தித்து செயற்படுமாறும் சட்டத்தரணிகளுக்குக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்