பலாங்கொடை மண்சரிவில் காணாமற்போன தேரரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன

பலாங்கொடை மண்சரிவில் காணாமற்போன தேரரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன

பலாங்கொடை மண்சரிவில் காணாமற்போன தேரரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2016 | 10:12 pm

பலாங்கொடை – பபஹின்ன, பரஹியன்கல மலையில் ஏற்பட்ட மண் சரிவினால் காணாமற்போன தேரரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

இராணுவம், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர்.

பபஹின்ன – பரஹியன்கல மலையில் நேற்று பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டது.

பபஹின்ன நகரில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் குறித்த மலை அமைந்துள்ளது.

மலையில் தேரர் வனவாசம் புகுந்திருந்த இடம் மீதே மண்மேடும் கற்பாறைகளும் சரிந்து வீழ்ந்துள்ளன.

வனவாசம் புகுந்திருந்த பாணந்துறை அனோமதஸ்ஸி தேரர் மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நியூஸ்பெஸ்ட் குழுவினர் நேற்று இரவில் இருந்து அந்த இடத்தில் தங்கியிருந்ததுடன், மீட்புப் பணியாளர்கள் இன்று காலை அங்கு விரைந்தனர்.

மண் சரிவு காரணமாக அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட சுமார் 25 அடி மலைப்பகுதி மண்ணினால் மூடியுள்ளதாக எமது குழுவினர் தெரிவித்தனர்.

தேரர் வசித்ததாகக் கூறப்படும் கற்குகையும் மண்சரிவில் புதையுண்டுள்ளது.

சுமார் 12 வருடங்களாக அனோமதஸ்ஸி தேரர் கற்குகையில் வசித்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.

இந்த மலையை அண்மித்த புவக்காவெல பள்ளத்தாக்கில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் 7 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் கூறினர்.

இதேவேளை, பரஹியன்கல மலையில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்தது.

மலை அடிவாரத்தில் வாழ்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக நிலையத்தின் மண்சரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டார்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியை அண்மித்த ஹொரகஸ்முல்ல, நியதகல ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 குடும்பங்கள் இந்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்