தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள்,பொதுக் கூட்டங்கள் ஆரம்பம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள்,பொதுக் கூட்டங்கள் ஆரம்பம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள்,பொதுக் கூட்டங்கள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2016 | 1:52 pm

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 20 இற்கும் மேற்பட்ட கூட்டங்களும் , மே தின ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேதின ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரிலுள்ள வீதிகள் சில இன்று மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சில வீதிகளில் போக்குவரத்திற்கு மட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேரணி 2 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின பேரணி மாளிகாவத்தை பிரதீபா மாவத்தைக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பேரணி தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சி, ராஜகிரியவில் மேதினப் பேரணியை ஆரம்பித்து, பத்தரமுல்ல புத்ததாச மைதானத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரும் கிருலப்பனை சந்தியில் நடத்தவுள்ள மே தினக்கூட்டத்தில் இணைவதற்கான பேரணியை நாராஹேன்பிட்டியில் நடத்தவுள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

மே தினப் பேரணி இன்று காலை 10.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, திருகோணமலை கிண்ணியா முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினரால் மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி இன்று காலை இடம்பெற்றது.

கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு அருகில் காலை 9.30 அளவில் முச்சக்கர வண்டி தொடரணி ஆரம்பிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கமும் இன்று (01) காலை பேரணி ஒன்றை நடத்தியது.

அதிகளவிலான முச்சக்கரவண்டி சாரதிகள் இதில் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்