கொழும்பின் பல பகுதிகளில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பின் பல பகுதிகளில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2016 | 8:12 am

மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரின் வீதிகள் சிலவற்றை மூடுவதற்கு நேரிடுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில வீதிகள் ஊடான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கும் நேரிடும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (01) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மாளிகாவத்தை பிரதேசத்தில், பிரதீபா மாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் சந்தியிலிருந்து சங்கராஜ சுற்றுவட்டம் வரையான வீதிகள் மூடப்படவுள்ளன.

நாளை பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் தெமட்டகொட சந்தியிலிருந்து பொரளை சந்தி வரையான வீதியும் மூடப்படவுள்ளது.

அதேபோன்று நாராஹேன்பிட்ட சந்தியிலிருந்து ஹைலெவல் வீதி வரையான பகுதியும் அந்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாளை பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை ஹைலெவல் வீதியின் ஸ்டெஃபர்ட் வீதி சமிக்ஞை விளக்குக்கு அருகிலிருந்து ஹெவ்லொக் வீதி, டிக்மன் வீதியின் வீதி சமிக்ஞை விளக்கு வரையான பகுதிகளும் மூடப்படவுள்ளன.

நாளை நண்பகல் 12.30 முதல் பிற்பகல் 3 மணி வரையான காலப்பகுதியில் பார்க் வீதி, பேஸ்லைன் வீதி, கரண வீதி சந்தியிலிருந்து பழைய வீதி, அண்டர்சன் வீடமைப்பு சந்தி வரையிலான பகுதிகளிலும் வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மேலும் பல வீதிகள் ஊடான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீதி இலக்கம் 138 இல், புறக்கோட்டை, மஹரகம, கொட்டாவை, ஹோமாகம மற்றும் ஹைலெவல் வீதியின் தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் பஸ்களுக்காக நாளை நண்பகல் 12 மணிமுதல் மாற்று வீதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனங்கள் தும்முல்ல, பௌத்தாலோக்க மாவத்தை, கனத்தை சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி, நாராஹேன்பிட்ட, நாவல சந்தி, நுகோகொடை, மற்றும் ஹைலெவல் வீதிகளைப் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதி இலக்கம் 120 மற்றும் 125 இல், ஹொரண, கெஸ்பேவ, பிலியந்தலை, இங்கிரிய பகுதிகளுக்கான பஸ்கள், தும்முல்ல, பௌத்தாலோக்க மாவத்தை, டூப்ளிகேஷன் வீதி, காலி வீதி, பெப்பிலியான ஊடாக தெஹிவளையால் பிலியந்தலை வீதிக்குள் பிரதேவசிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,வீதி இலக்கம் 154 இல் போக்குவரத்தில் ஈடுபடும் கிரிபத்கொட – அங்குலான பஸ்கள், களனி பாலம், பண்டாரநாயக்க சுற்றுவட்டம், ஒருகொடவத்த சந்தி, வெல்லம்பிட்டி, கொலன்னாவை வீதி, ஒபேசேகரபுர, கொட்டா வீதி, காசல் வீதி, பௌத்தாலோக்க மாவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் காலி வீதியை பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதி இலக்கம் 170 மற்றும் 190 இல் பயணிக்கும் பஸ்கள், புறக்கோட்டை, செரமிக் சந்தி, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, காமினி மண்டபம், டி.பி. ஜயா மாவத்தை, இப்பன்வெல, சொய்சா சுற்றுவட்டம், வோட் பிளேஸ், பொரள்ளை சந்தி மற்றும் கொட்டாவ வீதி என்பவற்றை மாற்று வழிகளாக பயன்படுத்த வேண்டுமெனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்