வட மாகாணத்தில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவு

வட மாகாணத்தில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2016 | 9:58 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான சாட்சி விசாரணைகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகள் கடந்த 25 ஆம் திகதி முதல் இன்று வரை நான்கு நாட்களாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமற்போனோர் தொடர்பில் முறைப்பாடுகளைச் செய்திருந்த மக்களுக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சாட்சி விசாரணை அமர்வுகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், இன்றைய தினம் 192 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

இதுதவிர, புதிதாக 66 பேரிடமிருந்து காணாமற்போனோர் தொடர்பில் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அமர்வுகளில் 997 பேர் நேரடியாக பிரசன்னமாகி சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர, இந்த நான்கு நாட்களிலும் புதிதாக சுமார் 300 பேரிடமிருந்து முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணை அமர்வுகள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன.

முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வுகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்