முல்லைத்தீவில் காணி அளவீட்டை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

முல்லைத்தீவில் காணி அளவீட்டை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2016 | 10:02 pm

முல்லைத்தீவு – சுதந்திரபுரத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை அளவீடு செய்வதற்கு சென்ற நில அளவையாளர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் பகுதியில் பொது விளையாட்டு மைதானம் மற்றும் தனியாரின் தென்னந்தோட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ளதாக சம்பவ இடத்திற்குச் சென்ற அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற நில அளவையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தக் காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காகவே நில அளவையாளர்கள் வருகை தந்ததாக சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களும் அரசியல்வாதிகளும் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இராணுவத்திற்கென வர்த்தமானி மூலம் ஒதுக்கப்பட்ட காணி சுவீகரிப்புக்கான இறுதிக்கட்ட அளவீட்டுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இராணுவ முகாமிற்கு அளவீட்டுப் பணிகளுக்காக சென்ற உத்தியோகத்தர்கள், மக்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்