பிள்ளையானின் பிணை மனு தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

பிள்ளையானின் பிணை மனு தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

பிள்ளையானின் பிணை மனு தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2016 | 6:36 pm

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை பிணை மனு தொடர்பான வழக்கு விசாரணையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி ஒத்திவைத்துள்ளார்.

பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமாரரட்னம் நீதிமன்றில் இன்று ஆஜராகியிருந்தார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனை மனுவிற்கு, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று ஆட்சேபனை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

அதற்கமைய, மனுதாரர்களின் ஆடசேபனை மனு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு பிரதம நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள தேவாலயம் ஒன்றினுள், பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யபட்டனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், பிள்ளையானுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்