எஸ். சிவகரன் நிபந்தனையுடனான பிணையில் விடுதலை: கைதுகளுக்கு த.தே.கூ. கண்டனம்

எஸ். சிவகரன் நிபந்தனையுடனான பிணையில் விடுதலை: கைதுகளுக்கு த.தே.கூ. கண்டனம்

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2016 | 10:06 pm

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண இளைஞர் அணி செயலாளர் எஸ். சிவகரன் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மன்னாரில் நேற்று கைது செய்யப்பட்ட சிவகரன், பயங்கரவாத விசாரணைப் பிரிவு உத்தியோகத்தர்களால் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, நிபந்தனைகளுடன் அவரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு இலட்சம் ரூபா வீதமான இரண்டு சரீரப் பிணைகளில் எஸ். சிவகரனை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கலையரசன் என்றழைக்கப்படும் அறிவழகன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று முன்தினம் (26) கைது செய்யப்பட்டார்.

இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இவரது குடும்பத்தினரினால், மனித உரிமைகள் ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் நகுலன் என்றழைக்கப்படும் கணபதி்ப்பிள்ளை சிவமூர்த்தி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி சமூகமயப்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்ற இந்த முன்னாள் போராளி, புனர்வாழ்வளிக்கப்பட்டமைக்கான
ஆவணத்தை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் வழங்கியுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி இதிமலசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளந் தெரியாதோரால் கடத்தப்பட்டார்.

பின்னர் இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் பங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாறான கைதுகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பல கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பல உத்தியோகபூர்வமான கைதுகளாக இல்லாமல், கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றமையானது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சில அரசியல் தலைவர்கள் குற்றம் சுமத்துவதைப் போன்று எல்.ரீ.ரீ.ஈ யினர் மீண்டும் தலைதூக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதா என பி.பி.சி செய்தி சேவை பாதுகாப்புச் செயலாளர், கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் வினவியுள்ளது.

தற்சமயம் தன்னால் எதனையும் கூற முடியாது என இதன்போது பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் உடை அணிந்த, உத்தியோகபூர்வமற்ற வாகனத்தில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலரே முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் ராமை கைது செய்துள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சீருடையின்றி பொலிஸாரினால் மக்கள் கைது செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் பி.பி.சி சந்தேஷவிற்குக் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்