ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அனுமதி

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2016 | 10:23 pm

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் நாட்டின், பெருமையையும் சுதந்திரத்தையும் உலகறியச் செய்யும் நோக்கில் சேர் ஜோன் கொத்தலாவல 1948 ஆம் ஆண்டில் எயார் சிலோன் என்ற பெயரில் தேசிய விமான சேவையை ஆரம்பித்தார்.

1977ஆம் ஆண்டின் பின்னர் திறந்த பொருளாதாரக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, எயார் லங்கா என்ற பெயரில் தேசிய விமான சேவை புதுப்பொலிவு பெற்றது.

80களில் ஆசியாவின் சிறந்த விமான சேவையாக மாறிய எயார் லங்கா விமான சேவை, ஏ 320 மற்றும் ஏ340 விமானங்களை பிராந்தியத்திற்கு அறிமுகப்படுத்தி விமானத்துறையில் முன்னிலை பெற்றது.

1998ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு எயார் லங்கா நிறுவனத்தின் 51 வீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டதுடன், முகாமைத்துவமும் அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கையின் தேசிய விமான சேவை – ஶ்ரீ லங்கன் விமான சேவை என இதன்போது பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் 2008 ஆம் ஆண்டில் ஶ்ரீ லங்கன் விமான சேவையை 51 பங்குகளுக்கான பணத்தை செலுத்தி மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டது.

பின்னர், 2017 ஆம் ஆண்டில் இலாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்றும் நோக்கத்தில், 7 ஏ330 ரக விமானங்களையும் 8 ஏ350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கமைய, 6 ஏ340 ரக விமானங்களைப் படிப்படியாக பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திடம் 22 விமானங்களுள்ளன.

6800 பணியாளர்களைக் கொண்ட ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம், தற்போது 44 நாடுகளின் 94 விமான நிலையங்களுக்கு சேவையை வழங்குகின்றது.

விமான சேவையின் நட்டத்தைத் தொடர்ந்தும் சுமக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]தற்போது ஶ்ரீ லங்கன் விமான சேவையின் கடன் சுமை 3.252 பில்லியன் டொலர்களாகும். இலங்கை ரூபா பெறுமதிப்படி 460 பில்லியன் ரூபா. இந்தக் கடனை எந்த வகையிலும் ஶ்ரீ லங்கன் விமான சேவையால் செலுத்த முடியாது. அரசாங்கம் இந்த விமான சேவைக்காக எடுக்க நேரிடும் கடனை நிறுத்தி மற்றுமொரு முதலீட்டாளரை பங்குதாரராக்குவதற்கு நாம் தீர்மானித்தோம். கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களில் 4 விமானங்களுக்கான தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. அந்தப் பணிகளை நிறுத்துமாறு நாம் அறிவித்துள்ளோம். அந்த 4 விமானங்கள் தொடர்பில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. மே மாதம் இரண்டாம் பாராளுமன்ற வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கவும் நாம் இணங்கியுள்ளோம்.[/quote]

என்றார்.

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தியிருந்த தொடர்பிலிருந்து விடுபட்டு நட்டமடையும் அரச நிறுவனமாக மாற்றமடைந்தமை தொடர்பில் கலாநிதி சரத் அமுனுகம இதன்போது தௌிவுபடுத்தினார்.

[quote]கடந்த அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்த போது நிதியமைச்சு அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது. ஊடகங்களும் இந்த ஒருதலைப்பட்ச தீர்மானத்தை எதிர்த்தன. அதுவொரு சர்ச்சைக்குரிய தீர்மானம். இந்த நடவடிக்கை வெற்றியளிக்கும் என நினைத்து அப்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது பலனளிக்கவில்லை என்பதை நாம் இன்று அனுபவ ரீதியில் காண்கிறோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்