ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு: கிளிநொச்சியில் 220 பேரிடம் சாட்சியங்கள் பதிவு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு: கிளிநொச்சியில் 220 பேரிடம் சாட்சியங்கள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2016 | 9:51 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் இதுவரை 220 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட அமர்வில் சாட்சியமளிப்பதற்காக இன்று 220 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

மேலும், காணாமற்போனோர் தொடர்பில் புதிதாக 64 முறைப்பாடுகளும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டவர்களுக்கான சாட்சி விசாரணை அமர்வு இன்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும், நேற்று இடம்பெற்ற அமர்வில் 248 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வு நாளை கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ளவர்களுக்காக இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் சாட்சி விசாரணைகளுக்காக 240 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை புதிய முறைப்பாடுகளும் மக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமற்போனோர் தொடர்பில் இறுதிக்கட்ட சாட்சி விசாரணைளை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள சாட்சி விசாரணைகளுக்கு, தூர இடங்களிலிருந்து வருவோருக்கான விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்